புனிதமிகு இந்த ரமழான் மாதத்தின் பயன்களை எப்படி முழுதாக பெறுவது என்ற தலைப்பில் அல்-கோபர் இஸ்லாமிய நிலையத்தில் இலங்கைளை சோந்த மார்க்க அறிஞர் மெளலவி. முபாரக் மதனி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ தமிழ் முஸ்லிம் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோ காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
முஸ்லிம்கள் அனைவரும் கண்டு பயன் பெறவும்.
நன்றி : தமிழ் முஸ்லிம் மீடியா (TAMIL MUSLIM MEDIA)
***************************************************
குறிப்பு : இந்த கட்டுரையை மீள் பதிவு செய்வதன் அவசியம் தற்போது ஒரு இயக்கத்தை சேர்ந்த சிலர் தங்களது எதிரி இயக்கத்தை தாக்குவதாக நினைத்து கொண்டு சிரீ கிருஸ்னன் என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் அனுப்பி அதில் எந்த மார்க்கத்தின் காவலர்களாக தங்களை அடையாளம் காட்டுகின்றார்களோ அந்த புனித இஸ்லாத்தையே தாக்கி அனுப்பியுள்ளார்கள்.
எச்சரிக்கை, உங்களுக்குள் உள்ள சண்டையை உங்களுக்குள் வைத்து கொள்ளுங்கள் இனியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் முகமூடி கிழிக்கப்பட்டு மக்கள் முன் நீங்களும் உங்கள் இயக்கமும் அம்மனமாக நிறுத்தப்படுவீர்கள். இயக்க தலைவர்கள் தொண்டர்களை ஒரு அளவோடு இருக்கச் சால்லி கண்டித்து வைப்பது நல்லது.
சமுதாயச் சண்டைக் கோழிகள்
தேர்தல் களை கட்ட ஆரம்பித்து விட்டது. ஏப்ரலிலோ அல்லது மே மாதத்திலோ என்பது இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் போது அறிவிக்கப்பட்டிருக்கலாம்.
ஆளும் கட்சியான ஐ.ஜ.மு. கூட்டணியும் சரி, தேர்தல் அறிவிப்பு வரும் முன்னரே தேர்தல் பணிகளை ஜரூராகச் செய்ய ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?
முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை தி.மு.க. அணியில் இருப்பது மட்டுமல்ல, அக்கட்சியுடனேயே சங்கமமாகி விட்டது. த.மு.மு.க. கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்று சரியாகத் தெரியவில்லை.
வரும் தேர்தலில் முஸ்லிம்கள் யாருக்காக வாக்களிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் எடுத்துச் சொல்லவும், யாருக்கு வாக்களித்தால் வரும் காலங்களில் தங்கள் உயிர், உடைமை, உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்றும் வழிகாட்டும் தலைவர்கள் இல்லையே என்று சமூகம் நிர்க்கதியாய் நிற்கிறது.
தேசிய லீக் சார்பில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து அண்மையில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் மு.லீக்கும் த.மு.மு.க.வும் கலந்து கொள்ளவில்லை. இட ஒதுக்கீடு விஷயமாக தமிழக முதல்வர், கலைஞர் கருணாநிதி மற்றும் சோனியா காந்தி ஆகியோரைச் சந்திப்பதென அக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, இட ஒதுக்கீடுக்கு யார் வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கே தங்கள் ஆதரவு என்ற முடிவுக்கு வந்தனர் என்று அறிகிறோம்.
மு.லீக், திமுக வின் சிறுபான்மைப் பிரிவாகவும், காதர் முஹைதீன் திமுக உறுப்பினராகவும் மாறி விட்டார் எனச் சொல்லி, மு.லீக்கின் மூத்த தலைவர்களான கோவை எல்.எம்.ஜலீல் ஹாஜியார், ஜமால் முஹைதீன் பாப்பா ஸாஹிப் ஆகியோர் தலைமையில் மு.லீக்கின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூடி, வரும் தேர்தலில் அதிமுக வுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுத்துள்ளதாக பத்திpரிக்கைச் செய்திகள் கூறுகின்றன.
சரி நாம் விஷயத்திற்கு வருவோம். சமுதாய இயக்கம் என்று தங்களை அறிமுகம் செய்து களப் பணியாற்றி வந்த தமுமுக வின் தலைவர்களில் ஒருவரான மார்க்க அறிஞர் பி.ஜெயினுல் ஆபிதீன், கருத்துவேறுபாடுகளால் தமுமுக விலிருந்து விலகி, தனி இயக்கம் கண்டார். அது தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் எனும் பெயரால் செயல்பட்டு வருகிறது.
சமுதாயம் பெரும் நம்பிக்கை வைத்திருந்த இவ்வமைப்பு பிளவுபட்டதால் அதன் பெரும் சொத்தான விசுவாசமான இளைஞர்கள் யார் பக்கம் என்பதை நிரூபிக்கும் முகமாக தமுமுக வும், டிஎன்டிஜே வும் ஆளுக்கொரு பக்கம் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி தங்கள் பலத்தை நிரூபித்து வருகின்றன.
பிரிந்ததிலிருந்தே இரு அமைப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிப்பதும், ஒருவருக்கொருவர் குற்றங்களைச் சுமத்தியும் சமூக மத்தியில் தங்கள் தரத்தை தாங்களே தாழ்த்திக் கொண்டனர்.
அண்மையில் தமுமுக விடம் சுனாமி நிதி வசூல் கணக்கைக் காட்டச் சொல்லி பி.ஜே. எழுப்பிய பிரச்சினை, அவர்களுக்குள்ளேயே பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கி 'இவர்கள் மீண்டும் இணைந்து சமுதாயப் பணியாற்றுவார்கள்' என்ற நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது.
இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தின் பல முஸ்லிம் அமைப்புகளும் கூட்டங்கள் மாநாடுகள் நடத்தி வந்தாலும் குடந்தை குலுங்கட்டும் என்று பி.ஜே. யின் தவ்ஹீத் ஜமாஅத்து கடந்த மாதம் 29 ம் தேதி கும்பகோணத்தில் மாநில அளவில் மிகப் பெரும் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து அதை நடத்தியும் காட்டியது. அதற்கு ஒருநாள் முன்பு மயிலாடுதுறையிலும், அதே தேதியில் இராமநாதபுரத்திலும் தமுமுக தன் பங்குக்கு இரு மாவட்ட மாநாடுகளை நடத்தியது. தௌஹீத் ஜமாஅத்தின் கும்பகோண மாநாட்டில் பெரிய அளவில் கூட்டம் கூடியது என்றும், அதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டதாகவும் பத்திரிக்கைச் செய்திகள் கூறின.
இந்த மாநாடுகள் நடந்து முடிந்த பிறகு, அண்மையில் நக்கீரன் வாரப் பத்திரிக்கை, மாநாடுகள் குறித்த செய்திகளை வெளியிட்டதோடு இரு அமைப்பினரும் போட்டிக்குப் போட்டி செயல்படுவதாகக் கருத்து வெளியிட்டிருந்தது. அதில் இரு அமைப்புகளின் தலைவர்களான பி.ஜே.யும் ஜவாஹிருல்லாஹ்வும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
கெட்டுப் போன இரண்டு பெண்கள் குழாயடியில் சண்டையிடும் போதுதான் அவர்களது யோக்கியம் வெளியே தெரிய வரும் என்று அறிஞர் அண்ணா ஒருமுறை குறிப்பிட்டார். இவ்விருவரும் ஒருவர் மீது மற்றவர் பழி சுமத்துவதைப் படித்த போது, அண்ணாவின் மேற்கண்ட கருத்து என் ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
சவாலுக்குச் சவால், ஏச்சுக்கு ஏச்சு என்றெல்லாம் மேடைகளில் மிகவும் மோசமான மொழிகளில் ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தவர்கள், இப்பொது ஊடகங்களிலும் மோதிக் கொள்வதைக் கண்டு தமிழ்நாட்டு முஸ்லிம்கள் மனம் குமைந்து கொண்டிருக்கிறார்கள்.
சண்டைக் கோழிகள் போல் இவ்விருவரும் சமூகத் தேவைகளை மறந்து திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறார்களோ என்று யாருக்கும் சந்தேகம் எழுவது நியாயமானதே.
ஏதோ காலத்தின் கோலம், அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகள், அல்லது அதையும் தாண்டி ஏதாவது ஒரு காரணத்தால் பிரிந்து விட்டார்கள். சரி, இனியுள்ள காலங்களிலாவது வசை பாடல்களை விட்டு விட்டு, அவரவர் வழிகளில் நின்று சமூகத் தொண்டாற்றக் கூடாதா என்ற ஆதங்கம் இந்த சமுதாயத்திற்கு உண்டு.
கடந்த காலங்களில் முஸ்லிம் லீக் உடைந்து அதில் பல பிரிவுகள் தோன்றி முஸ்லிம்களுக்கு எந்தப் பயனும் இல்லாமல் போனதால் முஸ்லிம் அமைப்புகள் மீதான சமூகத்தின் நம்பிக்கை சிதைந்தது. அந்த வெற்றிடத்தை தமுமுக நிரப்பும் என்ற நம்பிக்கை துளிர் விடத் துவங்கியது.
ஆனால் அது ஒரு விருட்சமாகும் முன்பாகவே இரண்டாக முறிந்த போது, அவையும் ஒட்டு மொத்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்கின. இப்போது இந்த பள்ளத்தை யார் நிரப்புவது என்பதே முன்னிற்கும் கேள்வி.
ஒரு காலத்தில் முஸ்லிம் லீக்கிலிருந்து பிரிந்த அப்துல் லத்தீப் சாஹிபும் சமுதாயத்தைப் பிளந்தனர். அதே வேலையை மீண்டும் இப்போது தமுமுக வும், த.ந.த. ஜமாஅத்தும் செய்து வருகிறதோ என்ற அச்சம் சமுதாயத்திற்கு உண்டு.
ஒருவரையொருவர் குற்றம் குறைகளைக் கூறி ஏசுவதிலும், பேசுவதிலும் ஈடுபடுவதைத் தவிர்த்து அடுத்து வரும் தேர்தலில் எவ்வாறு காய் நகர்த்துவது என்று இரு அமைப்பினரும் யோசித்து சமூகத்துக்கு நன்மை தரும் வழிகளை ஆராய்ந்தால் சமூகம் இவர்களை கை நீட்டி வரவேற்கும்.
இல்லை, வசவுதான் எங்கள் கொள்கை என்று இரு சாராரும் நின்றால், நேற்றைய மழையில் இன்று முளைத்த காளான்களின் வரிசையில் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உண்டு.
காலம் இன்னும் கடந்து விடவில்லை. காலம் இன்னும் காத்திருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையிலாவது தங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு இத்தேர்தல் மூலம் சமூகத்துக்கு என்ன நன்மை சேர்க்க முடியும் என்று திட்டமிட முன் வர வேண்டும்.
கடைசியாக இரு இயக்கத்தினருக்கும் ஓர் வேண்டுகோள். நீங்கள் ஒற்றுமையாக இருந்த போது அரசு உங்கள் அசுர பலத்தைக் கண்டு அஞ்சியதையும், இப்போது நீங்கள் பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொள்வதால் உங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமலும் கண்டு கொள்ளாமலும் புறக்கணித்து வருவதை நீங்கள் கவனிக்கிறீர்களோ இல்லையோ, சமூகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வும் கவனித்துக் கொண்டிருக்கிறான்!
நன்றி : ஏவி.எம்.ஜாபர்தீன் - சமநிலைச் சமுதாயம், மார்ச் 2006