ரூ.10 லட்சத்தை திருடிய கிருத்துவ பிஷப்

ரூ. 10 லட்சம் சுருட்டியதாக பிஷப் மீது புகார்

சென்னை : "தொண்டு நிறுவனம் மூலம் உதவி செய்வதாகக் கூறி, பல லட்ச ரூபாயை ஏமாற்றிவிட்டார்' என, பிஷப் ஒருவர் மீது தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட திருச்சபை ஊழியர்கள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர்.

தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட திருச்சபை ஊழியர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்தனர். புகாரின் விவரம்:சென்னை நெசப்பாக்கம் ஜெயபாலாஜி நகர் அன்னம்மாள் நகரில், "தி வோர்ல்டு ரிவைவல் மிஷன்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்துபவர் பிஷப் விக்டர். இவரும், இவரது மனைவியும் 2006ம் ஆண்டு எங்களது திருச்சபைகளை அணுகி, "எங்கள் தொண்டு நிறுவனம் மூலம் ஏழைகள், ஆதரவற்ற முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், மனநலம் குன்றியவர்கள், கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 ஓய்வு ஊதியம் வழங்கி வருகிறோம். உதவி பெற விரும்புவோர் பதிவு கட்டணமாக ரூ.200ம், போக்குவரத்து செலவு ரூ.200ம் தந்து உறுப்பினராக வேண்டும் என்று தெரிவித்தனர்.


இதை நம்பி நாங்கள், எங்கள் உறுப்பினர்களிடம் ரூ.10 லட்சம் வசூலித்து அவர்களிடம் தந்தோம். பிஷப் விக்டர் உறுதியளித்தது போல எந்த உதவியும் செய்யவில்லை. மீறி கேட்டால், ரவுடிகளை வைத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். கடந்த 30ம் தேதி, பணம் தருவதாக கூறி, எங்களை சென்னைக்கு வரவழைத்தனர். நாங்கள் வந்தபோது 30க்கும் மேற்பட்ட குண்டர்கள் "இனியும் பணம் கேட்டு பிஷப் வீட்டிற்கு வந்தால், யாரும் உயிரோடு திரும்பி போக மாட்டீர்கள்' என்று மிரட்டினர். எனவே, நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி : தினமலர்