எறையூரில் 20,000 வன்னிய கிறிஸ்தவர்கள் மதம் மாற தீர்மானம்!!
விழுப்புரம்: ஜாதிக் கலவரம் நடந்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்த 20,000 கிருஸ்துவர்கள் மதம் மாற முடிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரில் தலித் மற்றும் வன்னிய சமூகங்களைச் சேர்ந்த கிருஸ்துவர்கள் இடையே பயங்கர மோதல் மூண்டது.
தாங்கள் ஒதுக்கப்படுவதாகக் கூறிய தலித் கிருஸ்துவர்கள் தனியாக தேவாலம் கட்டிக் கொண்டனர். தங்கள் தேவாலயத்தையும் தனியாக அங்கீகரித்து இங்கு ஒரு பாதிரியார் தனியாக பிரார்த்தனை நடத்த வேண்டும் எனக் கோரினர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி மூண்டது. தலித் கிருஸ்துவர்களின் காலனிக்குள் நுழைந்து வன்னிய சமூக கிருஸ்துவர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வன்னிய கிருஸ்துவர்கள் பலியாயினர்.
இதையடுத்து எல்லா கிருஸ்துவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தனித்தனி தேவாலயம் எல்லாம் அமைக்கக் கூடாது என பேராயர் அந்தோணி ஆனந்தராயர் கூறினார்.
இந் நிலையில் எறையூர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர், முன்னாள் தலைவர்கள், முக்கியஸ்தவர்கள் முன்னிலையில் நேற்று முன் தினம் கூட்டம் நடந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பல ஆண்டுகாலமாக இருந்த பாரம்பரிய நடைமுறையை அழித்து கிறிஸ்தவ வன்னியர்களின் உணர்வுகளை குழி தோண்டி புதைத்து, துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆகியவற்றுக்கு எறையூர் குருக்களும், ஆயர்களும் எடுத்த முடிவுதான் காரணம்.
பாதுகாப்பு அளிக்கும் மதத்துக்கு மாறுவோம்...:
இவர்கள் எடுத்த முடிவு, எதிர்காலத்தில் கிறிஸ்தவ மதத்துக்குள் அரசியலையும் சாதியையும் கொண்டு வருவதுடன் பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.
எனவே தலித் கிறிஸ்தவர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதிக்குள் தனிப்பங்கு கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால்
எறையூரில் உள்ள 20,000 வன்னிய கிறிஸ்தவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மதத்துக்கு மாறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் எம்எல்ஏவான ரவிக்குமார் கூறுகையில்,
எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேராயர் கூறிவிட்ட பின்னரும் வன்னிய கிருஸ்துவர்கள் மதம் மாறப் போவதாக அறிவித்திருப்பது பற்றி மனசாட்சி உள்ளவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
கிருஸ்துவ மதத்திலும் தீண்டாமையை கடைபிடிப்போம் என்றரீதியில் இவர்கள் பேசுவது பற்றி மனசாட்சி உள்ளவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்,
தீண்டாமை கொடுமையை இந்து மதம் ஏற்காது. தலித்துகளை இழிபடுத்தும் செயல்களை ஆதரிக்காது. மதம் மாற விரும்பும் வன்னிய கிறிஸ்தவர்கள் எந்த வகையான பாதுகாப்பை எதிர்பார்க்கின்றனர் என்பது தெரியவில்லை.
தீண்டாமையை கடைபிடிக்கப் பாதுகாப்பு கிடைக்காது. உண்மையிலேயே தேசிய நீரோட்டத்தில் இணைய அவர்கள் விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என்றார்
நன்றி : தட்ஸ்தமிழ்