இளம்பெண்ணை கடத்திய கிருத்துவ பாதிரியார் குடும்பத்துடன் கைது

இளம்பெண்ணை கடத்திய பாதிரியார் பொள்ளாச்சியில் குடும்பத்துடன் கைது


பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இளம்பெண்ணை கடத்திய பாதிரியார், அவரது மனைவி உள்பட நான்கு பேரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி நந்தனார் காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ஆனந்தி என்கிற ஆராதனாவை கடத்தியதாக, திப்பம்பட்டியைச் சேர்ந்த பாதிரியார் அன்புநாதன் உட்பட நான்கு பேர் மீது அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.கடந்த மூன்று மாதங்களாக தேடப்பட்டு வந்த அன்புநாதன்,குடும்பத்துடன் ஊஞ்சவேலாம்பட்டி பஸ் ஸ்டாபில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் சென்று அவர்களை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட பாதிரியார் அன்புநாதன்(33),அவரது மனைவி மாலதி(29),அக்கா தெய்வானை (40),அக்கா மகன் வீரமுத்து (28) ஆகியோரை 15 நாள் காவலில் வைக்க பொள்ளாச்சி ஜே.எம்., எண் 1 கோர்ட் மாஜிஸ்திரேட் உத்தர விட்டார்.போலீசார் கூறுகையில், "பொள்ளாச்சி நந்தனார் காலனியைச் சேர்ந்த முருகனின் மகள் ஆனந்தி என் கிற ஆராதனாவை திப்பம்பட்டியைச் சேர்ந்த பாதிரியார் அன்புநாதன் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தியதாக புகார் கொடுக்கப்பட்டது.


அன்புநாதனின் மனைவி மாலதி, முருகன் வீட்டுக்குச் சென்று ஆனந்தியை கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அடுத்த நாளில் இருந்து ஆனந்தியை காணவில்லை.அன்புநாதனின் அக்கா தெய்வானை, அவரது மகன் வீரமுத்து என்கிற அகஸ்டின் ஆகியோர் ஆனந்தியை வீட்டில் இருந்து அழைத்து சென்றதாக புகார் செய்துள்ளனர்' என்றனர்.போலீஸ் விசாரணையில், "ஆனந்தியை நாங்கள் கடத்திச் செல்லவில்லை, அவரைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது' என்று அன்பு நாதன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


மகளிர் போலீசாருக்கு கடந்த வாரம் வந்த கடிதத்தில், "என்னை யாரும் கடத்தவில்லை, என்னை கடத்தியதாக அன்புநாதன் மீது பழி போடுவது தவறானது' என்று ஆனந்தி பெயரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை யார் அனுப்பியது, காணாமல் போன ஆனந்தி எங்கிருக்கிறார் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.