நடந்து கொண்டிருக்கும் சோதனை!!

உலகத்தில் எந்த ஒரு பொருளும் வீணாக படைக்கப்படவில்லை. மாறாக அனைத்தும் பெரும் அறிவை கொண்டு படைக்கபட்டுள்ளது. மக்கள் அவர்களிடமுள்ள அறிவை கொண்டு இந்த உண்மையை அறிந்து கொள்கிறார்கள். எவர்களது விசுவாசமும் ஞானமும் அதிகரிக்கின்றதோ அவர் இந்த காரணத்தை மிக இலகுவில் புரிந்து கொள்வார்.

நாம் நமது வாழ்நாள் முழுவதும் சோதிக்கப்படுகிறோம் என்பது இதில் முக்கியமான ஒன்று. அல்லாஹ் எமது விசுவாசத்தையும் எமது உறுதியையும் பல சந்தர்ப்பங்களில் சோதிக்கிறான். அவன் எமக்கு நற்பேறுகளை கொடுப்பதும் நாம் அவனுக்கு நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்கிறோமா என்பதை சோதிப்பதற்காக தான். அதை போன்று துன்பங்களை ஏற்படுத்துவது நாம் பொறுமையாக இருக்கிறோமா என்பதை சோதிப்பதற்காகும்.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது¢ பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே
நீங்கள் மீட்கப்படுவீர்கள். ( ஸூரத்துல் அன்பியா: 35 )


நாம் பல வழிகளில் சோதிக்கப்படுவோம். இதை பற்றி குர்ஆன்

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்¢ ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! ( ஸூரத்துல் பகரா : 155 )


எமது வாழ்க்கையானது பரிசோதிக்கப்படும் முறை எமக்கு விளங்காத வகையில் திட்டமிட்டுள்ளது. முதலில் எமது உடல் ரீதியாக சோதிக்கப்படுகிறோம். இதை பற்றி குர்ஆன்

(ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். ( ஸூரத்துத் தஹ்ர் 76:2)


நாம் பார்ப்பவை மற்றும் கேட்பவை அனைத்தும் பரிசோதனையின் ஒரு பகுதியே. எல்லா சூழ்நிலைகளிலும் நாம் குர்ஆனின் அடிப்படையில் வாழ்கின்றோமா? அல்லது எமது வீணான மனோ இச்சையை பின்பற்றி வாழ்கிறோமா? என்று சோதிக்கப்படுகிறோம்.

அல்லாஹ் விசுவாசியின் உறுதியை பலவகையான துன்பங்களை கொண்டு சோதிக்கின்றான். நிராகரிப்பாளர்களை கொண்டு விசுவாசிகள் கொடுமைப்படுத்தப்படுவது அதில் முக்கியமான ஒன்றாகும். சொற்களால் காயப்படுத்துதல், பரிகாசம் உடல் ரீதியாக துன்புறுத்தப்படல், சித்திரவதை மற்றும் கொலை செய்யப்படுதல் ஆகிய அனைத்தும் வழிகளிலும் விசுவாசிகள் சோதிக்கப்படுவார்கள். இன்னொரு வசனத்தில்,

(விசுவாசிகளே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்¢ உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து,
இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிபந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்¢ ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக்காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். ( ஸூரத்துல் ஆல இம்ரான் 3:186)


இந்த சோதனை முறைகள் அனைத்தும் சோதிப்பதற்காக அல்லாஹ்வினால் விசேடமாக உருவாக்கப்படடவை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இதை புரிந்து கொள்ளாதவர்கள் நிராசையடைகிறார்கள். இதற்கு பொருத்தமான குறிப்பிட்ட யூத மக்களின் வரலாற்று நிகழ்வை குர்ஆன் கூறுகிறது.

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்¢ ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு)த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை -அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம். ( ஸூரத்துல் அஃராஃப் 7:163)


ஞானமுள்ளவர்கள் மட்டுமே தாங்கள் சோதிக்கப்படுகிறோம் என்பதை விளங்கி கொள்வார்கள். அவர்கள் மாத்திரமே சோதனைக்கு ஏற்ற வகையில் நடந்து வெற்றி பெறுவார்கள். ஆகவே ஒரு விசுவாசி அவன் வாழ்நாள் முழுவதும் சோதிக்கப்படுவதை மறந்து விடக்கூடாது. 'நான் விசுவாசிக்கிறேன்' என்று சொல்வதன் மூலம் இந்த பரீட்சையில் வெற்றி பெறவோ அல்லது சுவர்க்கத்தை பெற்று கொள்ளவோ முடியாது.

'நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்' என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்¢ இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். ( ஸூரத்துல் அன்கபூத் 29 :2-3)


இன்னொறு வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா? ( ஸூரத்துல் ஆல இம்ரான் 3:142)