முஸ்லிம்கள் முன்னேறாதது ஏன்?!
அஷ்ரப் அலி தானவி
அஷ்ரப் அலி தானவி
இஸ்லாம் முன்னேற்றத்திற்குத் தடை விதிக்கின்றதா?
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
அண்ணல் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் பொழியட்டுமாக..!
இஸ்லாமிய அறிஞர்கள் உலகியல் முன்னேற்றத்திலிருந்து மக்களைத் தடுக்கின்றார்கள் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றார்கள்.
நான் கூறுகின்றேன் இந்த குற்றச்சாட்டு சரியானதல்ல!
பொதுவாக இப்படிக் குற்றம் சாட்டுவோர் உலகியல் முன்னேற்றம் அவசியம் என்பதை அறிவு ரீதியாக உறுதிப்படுத்த முனைகிறார்கள். ஆனால் நான் அதனை ஷரீஅத்தின் ஒரு கடமை என்று கருதுகின்றேன்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான் :
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு திசை (இலக்கு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை நோக்கியே அது செல்கின்றது. எனவே நீங்கள் (ஒருவரை விட மற்றவர்) நன்மைகளில் முன்னேறிச் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:148)
நமக்கோ ஒருவரையொருவர் ஆக்கப்பூர்வமான பணிகளில் முந்திக் கொள்ளும்படி கட்டளையிடப்பட்டுள்ளது. ஒருவரையொருவர் முந்திச் செல்வது தான் முன்னேற்றம் என்றால் அந்த முன்னேற்றத்தை திருக்குர்ஆன் வலியுறுத்துகின்றது. ஃபஸ்தபிகூ' - முந்திக் கொள்ளுங்கள் என்பது கட்டாயக் கடமையை விதிக்கும் ஏவல் வினையாகும்.
எனவே நாம் கேட்கின்றோம் :
இஸ்லாத்தில் உலகியல் முன்னேற்றம் கட்டாயக் கடமையாயிருக்க முன்னேற்றத்திலிருந்து தடுத்திட எவருக்குத் தான் உரிமையுள்ளது? குர்ஆன் விதிக்கும் கடமையிலிருந்து மக்களைத் தடுக்க எவரால் தான் முடியும்?
எனவே இஸ்லாமிய அறிஞர்கள் மீது கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு ஓர் அபாண்டமான வீண்பழியே ஆகும்.
ஆனால் இதில் இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்கும் இப்படி குற்றம் சாட்டும் 'முற்போக்குவாதி'களின் கூற்றுக்குமிடையேயுள்ள வேறுபாடு இதுதான் :
இந்த 'முன்னேற்றவாதி'கள் ''பிற சமுதாயங்களின் தோளோடு தான் நின்று அவர்களின் அடிச்சுவட்டை அணுவளவும் பிசகாமல் பின்பற்றி முன்னேறுங்கள்'' என்று கூறுகின்றார்கள். ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள் ''குர்ஆன் எவ்வாறு முன்னேறும்படி கூறுகின்றதோ அவ்வாறு முன்னேறுங்கள்'' என்று கூறுகின்றார்கள்.
2. பிற சமுதாயங்களைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் போக்கு
ஐரோப்பாவும் பிற சமுதாயங்களும் உலகியல் முன்னேற்றத்தை அடைந்திட என்னென்ன உபாயங்களை, திட்டங்களை, வழிமுறைகளைக் கைக் கொண்டுள்ளனவோ அந்த உபாயங்களும், திட்டங்களும், வழிமுறைகளும் அவர்களின் உலகியல் வெற்றிக்கு எந்த விதத்திலும் உதவிகரமாக இல்லை என்று நான் கூறவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் கட்டாயம் கூறுவேன் : அந்த உபாயங்களாலும் வழிமுறைகளாலும் முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்க முடியாது.
ஏனென்றால், முஸ்லிம்களுக்கு அந்த வழிமுறைகள் பலனளிக்க ஒரு விஷயம் தடைக்கல்லாக அமைந்திருக்கின்றது.
அந்தத் தடைக்கல் இது தான் : ஐரோப்பியர்களின் அந்த வழிமுறைகளை முஸ்லிம்கள் மேற்கொள்ளும் போது அவர்கள் பாவம் புரிபவர்களாயும் இறைவனுக்கு மாறு செய்பவர்களாயும் மாறி விடுகின்றார்கள்.
இந்த நிலை பிற சமுதாயத்தினருக்கு ஏற்படுவதில்லை. அவர்களின் செயல்பாடுகள் குறித்து இறைவன் அவர்களைக் கணக்குக் கேட்கப் போவதில்லை.
தற்போது அவர்கள் மீதுள்ள முழுமுதல் கடமை அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்வதேயாகும். இறைநம்பிக்கை கொள்ளாமல் நிராகரித்து வருகின்ற குற்றத்திற்காகN அவர்கள் - இதைவிடப் பெரிய வேதனையே இருக்க முடியாது எனும் அளவிற்கு தண்டிக்கப்படுவார்கள். மற்ற செயல்பாடுகள் குறித்து அவர்கள் விசாரிக்கப்படவும் மாட்டார்கள். அவற்றுக்காக அவர்களுக்குத் தண்டனையும் கிடைக்காது. ஆனால் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் அருளால் இறைநிராகரிப்புக்கான தண்டனை இல்லை. அவர்களிடம் அவர்களுடைய செயல்பாடுகள் பற்றி மட்டுமே விசாரிக்கப்படும்.
எனவே தான் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறான வழிமுறைகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை. அல்லாஹ் இந்த வழிமுறைகளினால் அவர்களுக்குப் பலனில்லாமல் ஆக்கி விடுகின்றான். தன் கட்டளைக்கு மாறு செய்ததற்கான தண்டனையை அவர்கள் இந்த உலகிலும் அனுபவித்துக் கொள்ளட்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்கின்றான்.
ஒவ்வொரு சமுதாயத்தின் உலகியல் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் உரிய வழிமுறைகள் ஒவ்வொன்றும் தனித்தனியானவை. ஒன்றுக்கொன்று வேறுபட்டவை! ஒரு சமுதாயத்திற்குப் பலனளித்த வழிமுறை அனைவருக்குமே அவசியம் பலனளித்தாக வேண்டும் என்பதில்லை.
இந்த வழிமுறைகள் அனைவருக்கும் பலன் தரக் கூடியவை என்றே வைத்துக் கொண்டாலும் இறைச் சட்டங்களைப் பின்பற்றுவது நம்மீது கட்டாயக் கடமையாகும். நமக்கு விலக்கப்பட்டிருக்கும் இந்த வழிமுறைகளை மேற்கொள்வது ஒருபோதும் சரியாகாது.
பாருங்கள், மதுவிலும், சூதாட்டத்திலும் கூட பலன் இருக்கின்றது.
இறைவன் கூறுகின்றான் :
நபியே! அவர்களிடம் கூறி விடுங்கள். மதுவிலும் சூதாட்டத்திலும் பெரும் தீமை உள்ளது. மக்களுக்கு சில நன்மைகளும் உள்ளன. (அல்குர்ஆன் 2:219)
ஆனால் எந்தப் பலனில் இறைவனின் கோபமும் கலந்திருக்கின்றதோ அத்தகைய பலனை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
இந்த நவீனவாதிகள் () ஷரீஅத்திற்கு எதிராக திட்டமும் தீட்டுகிறார்கள். அதற்கெதிராகச் சிந்திக்கவும் கருத்துத் தெரிவிக்கவும் செய்கிறார்கள். இவ்வளவும் செய்து விட்டு இஸ்லாமிய அறிஞர்கள் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும், தம்முடன் ஒத்துழைத்துத் துணை புரிய வேண்டும் என்றும் விரும்புகின்றார்கள்.
இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்..?
எந்த முன்னேற்றத்தில் இறைவனின் கோபம் இறங்குகின்றதோ, இம்மை, மறுமை இரண்டிற்கும் அழிவிருக்கின்றதோ, அந்த முன்னேற்றத்தை முன்னேற்றம் என்று எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?
ஐரோப்பியர்களின் வழிமுறைகளால் முஸ்லிம்களுக்கு முன்னேற்றம் கிடைக்க முடியாது. அவற்றால் வீழ்ச்சியைத் தான் அவர்கள் தழுவிட முடியும். இப்போது அத்தகைய வீழ்ச்சியைத் தான் அவர்கள் சந்தித்த வண்ணமிருக்கின்றார்கள்.
3. இரண்டுவித முன்னேற்றங்கள்
முன்னேற்றம் என்பது நல்ல விஷயங்களிலும் உண்டு. தீய விஷயங்களிலும் உண்டு. ஆனால் நன்மைகளில் முன்னேற்றம் என்பது முயற்சி செய்து பெறப்பட வேண்டிய ஒன்றாகும். தீய விஷயங்களில் முன்னேற்றம் என்பது அப்படிப்பட்டதல்ல. அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இதனை ஏற்றுக் கொள்ள நீங்கள் மறுத்தால் ஒரு கொள்ளைக்காரன் கூட 'என்னைக் கொள்ளையடிப்பதிலிருந்து ஏன் தடுக்கிறார்கள், நான் முன்னேறவே விரும்புகின்றேன்' என்று கூற உரிமையுண்டு என்றாகி விடும்.
ஏன், இவ்வாறே
ஒவ்வொரு மோசடிக்காரனுக்கும்,
பித்தலாட்டக்காரனுக்கும்,
ஜேப்படித் திருடனுக்கும்
கன்னக்கோல் ஆசாமிக்கும்
கள்ளனுக்கும், கபன் திருடனுக்கும்
லஞ்ச ஊழல் பேர்வழிக்கும்
சூதாடிக்கும், சூதாட்ட விடுதி நடத்துபவனுக்கும்
ஆக, ஒவ்வொர் அயோக்கியனுக்கும் தன்னை நியாயம்படுத்திக் கொள்ள உரிமையுண்டு என்றாகி விடும்.
எனவே தான் கூறுகின்றோம் :
நல்ல விஷயங்களில் அடைகிற முன்னேற்றம் தான் முன்னேற்றமாகும். தீய விஷயங்களில் அடைகிற முன்னேற்றம் தீயதாகும்.
இனி, இந்த நவீனவாதிகள் எதனை முன்னேற்றம் என்று கூறுகின்றார்களோ அதனை அவர்கள் 'அது உண்மையிலேயே நன்மையானது தான்' என்று நிரூபித்துக் காட்டட்டும், இஸ்லாமிய அறிஞர்கள் எதனை முன்னேற்றம் என்று கூறுகின்றார்களோ அது தான் நன்மையானது என்று நாம் நிரூபித்துக் காட்டுவோம்.
முன்னேறுவது அவசியமானது தான். கடமையானது தான். ஆனால் இந்த நவீனவாதிகள் மேற்கொள்ள விரும்புகின்ற மேற்கத்திய வழிமுறைகள் முன்னேற்றத்தை தீமையில் முன்னேறுவதாக ஆக்கி விட்டிருக்கின்றன! உண்மையில் இது முன்னேற்றமேயல்ல. மாறாக இது வீழ்ச்சியும் பின்னடைவுமேயாகும