தென்காசியில் நீதியின் கதவு திறக்குமா?
நெல்லை மாவட்டம் தென்காசியில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வருகிறார்கள். பிரபலமான காசி விஸ்வநாதர் கோயிலும் இங்கு உள்ளது. யாத்திரிகர்கள் அடிக்கடி வந்து செல்லும் நகரம் இது. கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் முஸ்லிம்கள் பன்னெடுங்காலமாக கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றார்கள். முஸ்லிம் வியாபாரிகள் ஒன்று கூடி தங்களுக்காகவும், இங்கே வந்து செல்கின்ற பயணிகளுக்காகவும் 1968 ல் சில வீடுகளை முறைப்படி விலைக்க வாங்கி ஒரு மஸ்ஜிதை உருவாக்கினார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை தென்காசி பஜார் பள்ளிவாயிலில் ஐவேளை தொழுகையும் இமாம் முஅத்தின் நியமிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அம்மன் சன்னதித் தெரு கதவிலக்கம் 35,36 ல் அமைந்துள்ள இப்பள்ளியில் இன்றும் சுமார் 100 பேருக்கு மேல் தொழுது வருகிறார்கள்.
யாருக்கும் எந்த இடையூறும் இல்லை. இந்தப் பள்ளிவாயிலை உருவாக்குவதற்காக வாங்கப்பட்ட கட்டடங்கள் பழுதடைந்து விழத் தொடங்கியது 1990 களின் ஆரம்பத்தில். இனி இங்கே தொழுகையைத் தொடர்வது முடியாது என்பதைப் புரிந்து கொண்ட ஜமாஅத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் முனிசிபால் அலுவலகத்தை அணுகி கட்டடத்தைப் புதுப்பிக்க அனுமதி கோரினார்கள்.
இதில் தான் பிரச்னை ஆரம்பித்தது. வழக்கம் போல இது கோயில் நிலம். இந்த இடத்தில் மசூதி கட்ட விட மாட்டோம் என்பது போன்ற எதிர்ப்புகள், கோஷங்கள் சங்கபரிவார இயக்கங்களின் பொதுக் கூட்ட மேடைகள் வழியாக வந்தன.
ஜமாஅத்தினர்களின் தொடரான முயற்சியால் 1996 ல் தென்காசி நகராட்சி பள்ளியை மராமத்து செய்ய அனுமதித்து தீர்மானம் நிறைவேற்றியது. அப்போதைய கலெக்டர் தனவேல் அவர்களும் புதிய கட்டடம் கட்டாமல் பழுது பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கின்றார். ஆனால் இந்தப் பிரச்னையில் பலருடைய தலையீடுகளும் புகுந்து அன்றைய திருநெல்வேலி எஸ்.பி.யாக இருந்த சுனில் பாலிவாலும் ஒரு செங்கல்லைக் கூட அனுமதிக்க முடியாது எனக் கறாராய் இருந்திருக்கின்றார்கள்.
கடந்த 8.9.2002 அன்று பள்ளியின் ஒரு பகுதி திடீரென உடைந்து விழுந்திருக்கிறது. நல்ல வேளையாக அந்த நேரத்தில் தொழுகைக்காக யாரும் அங்கு நிற்கவில்லை. இல்லையேல் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
இந்தக் கால இடைவெளியில் எத்தனையோ மாற்றங்கள் அங்கு நிகழ்ந்து விட்டன. முன்பு இறுக்கமான மனநிலையிலிருந்து இந்து முன்னணியும், பாஜக வும் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டன. பஜார் தொழுகைப் பள்ளி கட்டுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. கலெக்டர் ஒரு சாமாதானக் குழுவை அமைத்து முஸ்லிம்களுக்குப் பள்ளி கட்ட அனுமதிக்க வேண்டும் எனத் தங்களின் லெட்டர் பேடுகளில் கலெக்டருக்கு விண்ணப்பம் அளித்துள்ளனர்.
10.10.2002 தேதியிட்ட தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் அ.சங்கர பாண்டியன் என்பவரும், அதே தேதியிட்டு பாஜக தென்காசிப் பொதுச் செயலாளர் அ.விவேக் பாண்டியன் என்பவரும் அனுமதி அளிக்குமாறு கோரியுள்ளார்கள்.
அவ்வாறே 13.11.2002 தேதியிட்ட பாஜக வின் மாநில அலுவலகச் செயலாளர் க.ராஜசிம்மன் அவர்கள் பள்ளிவாசல் கட்ட அனுமதியளிக்குமாறு தென்காசி நகராட்சி ஆணையருக்கு தங்களது விண்ணப்பத்தை அளித்துள்ளார்கள்.
இந்தப் பள்ளிவாயிலுக்க எதிரே உள்ள சப்கோர்ட்டிலும் பள்ளி கட்ட எந்தத் தடையுமில்லை என Nழுஊ வாங்கியுள்ளார்கள். எல்லாமிருந்தும் இந்தப் பள்ளிவாயில்கட்டுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்காது என்ற நிலையிலிருந்தும் பள்ளி கட்ட சட்டப்படி வரைவு அனுமதி வழங்கப்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஜமாஅத்தார்கள் இது சம்பந்தமான முன்பு முதல்வர் கருணாநிதி வரை முட்டி மோதியிருக்கின்றார்கள். பலன் ஒன்றுமில்லை.
கடந்த 19.9.2002 அன்று நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவாலை அணுகி இப்பிரச்னையைத் தீர்த்து வைக்குமாறு மனு கொடுத்துள்ளார்கள். ஆனால் விஷயம் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது.
இது சம்பந்தமாக நாம் 21.04.03 அன்று மாலை கலெக்டர் சுனில் பாலிவாலைச் சந்தித்துக் கேட்ட போது, இந்த மாதம் இறுதி நாளாகி விட்டது. நான் அடுத்த மாதம் சமாதானக் குழு அமைத்து விடுகின்றேன் என்று உறுதியளித்தார்.
அரசு இதில் தலையிட்டு முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டில் வழிபாட்டு உரிமை, அதற்கான கட்டடம் கட்டும் உரிமை உள்ளன என்பதை நிரூபிக்க வேண்டும். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் விரைந்து செயல்படுவார் என இந்துக்களும், முஸ்லிம்களும் எதிர்பார்க்கின்றார்கள்.
நன்றி : விடியல் வெள்ளி ஏப்ரல் 2003
தென்காசியில் நீதியின் கதவு திறக்குமா?
பதிந்தது நேசமுடன் இஸ்லாம் நேரம்
குறிச்சொல் தென்காசி