நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த காலப் பகுதி தொழிற் புரட்சி என்பதை விட விஞ்ஞானப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காலம். புதுப் புதுக் கண்டுபிடிப்புகள். நாளுக்கு நாள் அதி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற இந்தத் துறை, ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விதமான மாற்றத்தை, சற்று சில நொடித் துளிகளுக்கு முன் தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், என்ன செய்ய அதனை அடுத்த நொடியில் வந்துதிக்கும் புதுக் கண்டுபிடிப்பு, இதனை பழையதாக்கி விடுகின்றது. அந்தளவுக்கு விஞ்ஞான யுகம் கோலோச்சிக் கொண்டிருக்கின்றது.
சரி..! விஷயத்திற்கு வருவோம். நம்முடைய தலைப்பு இணையத்தில் முஸ்லிம்கள். இந்த இணைய தளத்தைப் பற்றி விரிவாக நாம் சொல்ல வேண்டியதில்லை. கண்மூடி கண் திறக்கும் வேளைக்குள் எத்தனையோ தகவல் பரிமாற்றங்கள் ஈ-மெயிலாகவும், பேக்ஸ் - தொலைநகல்ச் செய்தியாகவும் பறக்கின்றது. அரசின் தகவல் பரிமாற்றத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட இந்த சாதனம் இப்பொழுது பாமரன் வரைக்கும் உபயோகிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இணையத் தள வழியாக சாமான்ய மனிதனும் கூட, விளம்பரம் செய்ய முடியும், வியாபாரம் செய்ய முடியும், தனக்கென்று ஒரு இணையப் பக்கத்தை திறந்து கொள்ள முடியும், தனது பொருட்களை அங்கு சந்தைப்படுத்த முடியும். அதன் மூலம் மில்லியன் கணக்கான மக்களுக்கு செய்தியைக் கொண்டு சேர்க்க முடியும், உரையாட முடியும், கலந்தாலோசனை செய்ய முடியும், விவாத அரங்குகளை நடத்த முடியும், அரட்டை அரங்கங்களையும் நடத்த முடியும், கற்பனையிலும் கூட நினைத்துப் பார்த்திராத அளவுக்கு செய்திக் குழுக்கள் நிறைந்து கிடக்கின்ற உலகமது.
வியாபாரிகள், கல்வியாளர்கள் மற்றும் புதிய புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்வோர்கள் என்று அனைவரும் ஒருவர் மீது ஒருவர் முட்டி மோதி, யார் புதிய வாய்ப்புகளை முதலில் பெற்றுக் கொள்வது என்று போட்டி போட்டிக் கொண்டு இருக்கின்ற உலகமது. உலக மின்னணுக் கிராமமானது இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்தே இருக்கும். அங்கு பொருட்களைச் சந்தைப்படுத்துவதும், பொருட்களை விற்பதும், வாங்குவதும், கையில் கரன்ஸி படாமல், அதன் அழுக்குப் படாமல், மின்னணுச் சாதனம் வழியாகவே பண வரவு, பணப்பட்டுவாடா என்று அனைத்தும் நடந்து கொண்டிருக்கும் நவீன யுகம் இது.
உலகத்தில் எதையாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று துடித்த சிலரது முயற்சியின் விளைவாக விளைந்தது இது. யாருடையவும், எந்த அரசு, தனியார் என்று எவருடைய ஆதிக்கத்திலும் இல்லாமல், சுதந்திரமாக அதன் இயக்கம் வியாபித்திருக்கின்றது.
இதில் யார் வேண்டுமென்றாலும் நுழைந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடிகின்றது, பொதுவான பயன்பாடு, பலன்களின் அடிப்படையில் சாதாரணமாகக் காணப்படுகின்ற தடைகளான இனம், தேசம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் தாண்டி அது உறவாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். சமூகக் கலாச்சாரங்களில் முன்னணியில் இருக்க விரும்பும் குழுக்கள் தங்களுக்குள் கலந்துரையாடி ஒருவர் மற்றவருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, இந்த உலகத்தினை அவர்களது கருத்தியலின் அடிப்படையில் மிகச் சிறந்ததாக அமைப்பதற்குண்டான பணிகளைச் செய்து வருகின்றார்கள்.
இத்தகைய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் நல்ல வலைமனையை உருவாக்கி வைத்திருகின்றார்கள், மென்பொருள் இன்ஜீனியர்களாக, புரோம்கிராமர்களாக, இணையத்தள தகவல் துறையில் மிளிரக் கூடியவர்களாக பலர் முஸ்லிம்களில் இருக்கின்றார்கள். பெருமைப்படத்தக்க செய்தி தான்.
மெயிலிங் குரூப்ஸ், நியூஸ் குரூப்ஸ், அரட்டை அரங்கம் மற்றும் இணையப் பக்கங்கள் என இஸ்லாத்தைப் பற்றிய பல்வேறு தகவல் தளங்களை உருவாக்கி பணியாற்றுகின்றார்கள். இஸ்லாத்தைப் பற்றி அறியாத பலர் இஸ்லாமிய தகவல்களைக் கொண்ட இத்தைகய செயல்பாடுகள் மூலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்கின்றனர். இன்னும் இதற்கு முன் இஸ்லாமிய வாடையே என்னவென்று அறியாத மீடியாக்களிடமிருந்தும், இஸ்லாமிய எதிர்ப்பு அணியினர்களிடமிருந்தும், அவைகளால் சொல்லப்படுபவைகள் தான் இஸ்லாம் என்றும் கருதிக் கொண்டிருந்த காலம் போக, இப்பொழுது இஸ்லாமியத் தொடர்புகளே இல்லாத ஒருவர் இஸ்லாத்தைப் பற்றித் தானே அறிந்து கொள்ளவும், இன்னும் அதில் நம்பகமானது எது என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும் இயலுகின்ற ஒரு நிலை, இந்த இணையத் தள உருவாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பயன்பாடுகளில் ஒன்று.
முக அறிமுகங்கள் தேவை இல்லை, ஒருவர் மற்றவருக்கிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள முடிகின்றது. மற்றவர்களுடன் அதன் காரணமாக நெருக்கம் ஏற்படுகின்றது. இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் ஒருவர் மற்றவருடன் கருத்துப் பரிமாற்றம் நடத்தும் பொழுது, தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் பொழுது, தூரத்தால் பிரிந்திருந்தாலும் எண்ணத்தால், இன்னும் இஸ்லாமிய உம்மத் என்ற வகையில் ஓருடலாக, நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், அதனை உணர்ந்து கொள்ளவும் முடிகின்றது. ஈமெயில் தொடர்கள், மோடத்தைச் சொடுக்குதல் ஆகியவற்றினால் தூரங்கள் குறைந்து விடுகின்றன, உறவுகள் இறுக்கம் பெறுகின்றன. இத்தகைய தொடர்புகள் புதியதொரு பரிமாணத்தை உருவாக்குகின்றன, நம்மை ஒருங்கிணைக்கின்றன, நம்முடைய கருத்துக்களை கட்டுரைகளாகவும், அனுபவங்களாகவும் பரிமாறிக் கொள்ள உதவுகின்றன.
இன்;றைக்கு இணையத்தள உலகில் ஏராளமான இஸ்லாமிய இணையத்தளங்கள் இருப்பினும், அதனைக் காட்டிலும் சிறப்பாக அஹ்மதியாக்களும், நேஷன் ஆஃப் இஸ்லாம் மற்றும் இஸ்லாத்திற்கு முரணான கொள்கைகளைக் கொண்டவர்களும் இணையத்தளத்தினை வைத்துள்ளார்கள். இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள தேடுதல் வேட்டை நடத்தினால், ஆளுக்கொரு கருத்தைச் சொல்லும், பார்ப்பவரை குழப்பத்தில் ஆழ்த்தி வைக்கும் இணையத்தளங்களை இஸ்லாத்தின் எதிரிகள் நடத்தி வருவதோடு, இஸ்லாத்தைப் பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்குவதில் அவர்கள் நம்மை விடக் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வருகின்றார்கள். இதனை மிஷனரிக்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர்.
நியூஸ் குரூப்புகளில் இஸ்லாத்தைப் பற்றி விவாதிக்கும் பொழுது, இஸ்லாமானது கற்காலத்துக்கு உகந்தது என்று அவர்கள் பிரச்சாரம் செய்வதுடன், விவாதத்திற்குப் பதிலாக முஸ்லிம்களைத் தாக்குவதும், அவர்களை எல்லா பக்கங்களிலும் சூழ்ந்து அவர்களை பிரித்தாள்வதும் தான் இவர்களது முக்கியக் குறிக்கோளாக இருக்கின்றது.
திண்ணைப் பக்கத்தை எடுத்துக் கொள்வோம். முஸ்லிம்கள் அழிக்கப்பட வேண்டும், அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று மனோ வியாதி பீடித்தவர்கள் போல விவாத அரங்கு நடத்துவதைப் பார்க்கின்றோம். அதில் முஸ்லிம்களைப் புண்படுத்த வேண்டும், முஸ்லிம்களைக் கீழ்த்தரமானவர்களாகக் காட்ட வேண்டும், இஸ்லாத்தைச் சாட வேண்டும் என்பதைத் தவிர வேறொரு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
இஸ்லாம் தெளிவாகச் சொல்கின்றது, மார்க்கத்தில் எந்தவித வற்புறுத்தலும் இல்லை, ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்களது விருப்பம் என்கின்றது. இதனை விடச் சுதந்திரமான கருத்துச் சுதந்திரம் எங்கிருக்கின்றது.
இந்து மதத்தின் உன்னதமான தலைவராகப் போற்றக் கூடியவர் விவேகானந்தர். அவர் அவரது சமயக் கொள்கையில் உறுதியாக, பற்றோடு இருந்தாலும், ஏனைய மதங்களில் உள்ள நல்ல அம்சங்களை அவர் பாராட்டாமல் இருந்ததில்லை. இதுவே, சமய நல்லிணக்கத்திற்கு உகந்ததாக இருக்கும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை அதிலும் குறிப்பாக தமிழ் இணையத்தளங்களைப் பொறுத்தவரை, இணையத்தளம் என்ற மீடியா எதற்காக, ஏன், எப்படி, என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லாமலேயே போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
தமிழுழகம் பயனடைந்து கொள்வதற்காக இன்றைக்கு தமிழில் இஸ்லாத்தை எடுத்துக் கூறும் பல்வேறு இணையத்தளங்கள் உருவாகி இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணி. அது தவிர்க்க முடியாது. இருப்பினும், தமிழ்இஸ்லாம்.காம் உட்பட இன்னும் நாம் ஏனைய இஸ்லாம் அல்லாத இணையத் தளங்களுக்கு ஈடாக அதனை நம்முடைய சமூகத்திற்காகவும், இன்னும் இஸ்லாம் முழு மனித சமூகத்திற்குமானதொரு மார்க்கம் என்ற அடிப்படையிலும் அதனைப் பயன்படுத்தவில்லை என்றே வருத்தமடைகின்றோம்.
செய்திகளைப் பொறுத்தவரை இன்னும் ஏஜென்ஸி செய்திகளையும், உள்ளூர் மீடியாச் செய்திகளையும் தான் நம்பிக் கொண்டிருக்கின்றோம். நமக்கென செய்தி ஊடகங்களோ, ஏஜென்ஸிகளோ, செய்தி சேகரிப்பாளர்களோ கிiடாயது. இந்த மீடியா உலகத்தில் இன்னும் நாம் கால் பதிக்கவில்லை. வளங்கள் இல்லை என்ற சாக்குப் போக்குச் சொல்ல முடியாது. எல்லா வளங்களும் நிறைந்து கிடக்கின்ற ஒரே சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம் மட்டுமே. ஆனால் பயன்படுத்தத் தெரியாமல், பயன்படுத்தாமல், இன்னும் அந்த வளங்கள் இயக்க ரீதியாக கூறுபோடப்பட்டும் கிடக்கின்றன.
எல்லா வளங்களையும்.., மனித வளம், திறமை, கல்வி, செல்வம், இளைஞர்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பணியாற்றக் கூடிய நாள் எப்பொழுது வருமோ என்று ஏங்கித் தவிக்க வேண்டிய நிலையில் தான் இருக்கின்றோம்.
சக்திமான் தொடர்களும், இராமாயணம், மகாபாரதம் என்று மாற்றுமத, மாற்றுக் கலாச்சாரத் தொடர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் பொழுது, அது போன்றதொரு மீடியாவை இஸ்லாமிய ரீதியில் பயன்படுத்த வழி தெரியாமல் இருக்கின்றோம். அரபுலகத்துக் குழந்தைகளுக்கு இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்கள், சம்பவங்கள், ஆளுமைகள் ஆகியவற்றைக் கொண்ட கார்ட்டூன் சித்திரங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு அவர்களுக்கு உருவாக்கித் தரப்பட்டுள்ளது. ஆனால், நம்முடைய குழந்தைகளுக்கு அதன் வாடையையே நுகரும் வாய்ப்புக் கூடக் கிடையாது. உருவாக்கித் தரப்படவில்லை.
இன்றைய குழந்தைகள் தான் நாளைய தலைவர்கள். வருங்காலத் தூண்கள். அவர்களை இன்றைய அறிவியல் துணை கொண்டு எவ்வாறு இஸ்லாமியப்படுத்த முடியும் என்று சிந்திக்கவே இல்லை. இந்த நிலையில் போய்க் கொண்டிருந்தால், நம்முடைய தோல்வியை நாமே ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைதான் ஏற்படும். நாம் வழுக்கி விழும் ஒவ்வொரு அடிக்கும் மாற்றுக் கலாச்சாரத்தைக் குற்றப்படுத்தி வேலையில்லை. நாம் என்ன செய்தோம், என்ன செய்திருக்கின்றோம் என்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இணையத்தள உலகில் இஸ்லாத்திற்கு முரணான அம்சங்கள் பரந்து விரிந்து, தங்களது கால்களை அகலப் பரப்பிக் கொண்டு விட்டன. இதில் இஸ்லாத்தைப் பற்றிய தகவல்கள் என்பது கடலில் விழுந்த ஒரு துளி போலக் கிடக்கின்றது.
தமிழில் உள்ள புரதான நூல்கள் உரை நடையாகவும், விளக்கவுரையாகவும் கிடைக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் அடிப்படையை இயம்பக் கூடிய திருமறைக்கான விளக்கவுரை, தப்ஸீர்களை எத்தனை இணையத்தளத்தில் வைத்திருக்கின்றோம். சிந்திக்க வேண்டும். இராமாயணமும், மகாபாரதமும் அவற்றிற்கு எத்தனை எத்தனை உரைநடைகள் உள்ளனவோ அத்தனையும் இணையத்தில் பார்த்து விட முடியும்.
ஆனால், திருமறைக்குர்ஆனுக்கான விளக்கவுரையை நமது இணையத்தளங்களில் காண முடிகின்றதா? இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாத்தின் அடிப்படைகள், இப்னு தைமிய்யா, இப்னு கைய்யும், தபரீ, போன்ற எண்ணற்ற மார்க்க மேதைகளின் ஆக்கங்கள் தமிழ் இணையத்தளத்தில் வந்து விட்டனவா..?
இவற்றிலெல்லாம் கவனம் செலுத்த நேரமில்லை. ஆனால் கோஷ்டி மோதலில் ஒருவர் மற்றவருக்கு பதில் சொல்ல மட்டும் நாற்பது என்ன, ஐம்பது பக்கங்களை தமிழில் தட்டச்சு செய்கின்றோம், நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல.., இணையத்தளம் என்பது என்ன, எதற்காக, ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல், இஸ்லாத்தைப் பற்றி இயம்ப வேண்டிய பக்கங்கள், சக முஸ்லிமைச் சாடி அதுவும் இணையத்தளத்தில் இன்பச் சுற்றுலா நடத்துவதைப் பார்க்கின்றோம்.
திண்ணைப் பகுதியில் திட்டுகின்றார்கள், பேசுகின்றார்கள் என்றால்.., உண்மையான இஸ்லாத்தை இணையத்தளத்தில் அறிமுகம் செய்திருந்தால்.., முஸ்லிம்கள் பதில் சொல்வதற்கு முன் ஆதாரத்துடன் பதில் கொடுப்பதற்காக எத்தனையோ நடுநிலையான சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்துதவ வேண்டிய பொறுப்பு யாரைச் சார்ந்தது. ஆலிம்கள் .., கற்றறிந்த உலமாக்கள்..!
இவர்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றால், வேதனை தான் மிஞ்சுகின்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாமிய வழிகாட்டல் மையங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எண்ணற்ற அழைப்பாளர்கள், குறிப்பாக நாம் இந்த மார்க்கத்திற்காக என்ன செய்தோம், செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை சற்று தங்களது உள்ளத்துடன் உரையாடிப் பார்க்க வேண்டும். இதனைக் குறையாகச் சொல்லவில்லை. மாறாக, வேதனையுடன் சொல்லிக் கொள்கின்றோம்.
இன்றைய உலகம் இயங்குகின்ற வேகத்தோடு நாமும் பயணித்தால் தான் வெற்றியடைய முடியும். இஸ்லாத்திற்கு முரணான அத்தனை கொள்கைகளும் சூப்பர் ஸானிக் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது, இன்னும் நாம் ஆமையின் முதுகில் உட்கார்ந்து பயணிப்பது கூடுமா? கூடாதா? என்று விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
பொய் உலகச் சுற்றி வந்து விட்ட பின்னும், உண்மை சோம்பல் முறித்துக்; கொண்டிருந்தால் எப்படி என்பதைச் சற்றுச் சிந்திக்க வேண்டும்.
யாரையும் குற்றம் சொல்ல வேண்டும் என்பது எம்முடைய நோக்கமல்ல, மாறாக உண்மை சில நேரம் கசப்பாகவும் இருக்கும் என்பதே உண்மையாகும்.
இந்த இணையத்தள உலகில் எல்லோரது பங்களிப்பும் அவசியமாக இருக்கின்றது. தமிழ்இஸ்லாம்.காம் தளத்தைப் பொறுத்தவரை இந்த பணியானது சமூதாயத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரின் மீதும் சுமத்தப்பட்ட கடமையாகக் கருதுவதால், அதன் அடிப்படையில் எங்களால், எங்களது சிந்தனை, கல்வி அறிவு ஆகியவற்றினை எந்தளவு இறைவன் வழங்கியுள்ளானோ அதன் அடிப்படையில் இயன்றதைச் செய்கின்றோம். பொருள் இருப்பவருக்கு ஸகாத் கொடுப்பது எவ்வளவு அவசியமோ, அதனைப் போலவே கல்வி வழங்கப்பட்டவர்கள், தான் பெற்ற கல்வியின் பயனை சமூகம் அடைந்து கொள்வதற்கும் வழங்குவதும் கூட ஒரு வகையில் ஸகாத் மற்றும் ஸதகா - தானமாகக் கருதப்படும்.
ஆக்கங்கள் தயாரிப்பிற்குத் தேவையானவற்றைச் சேகரிப்பது, மொழியாக்கம் செய்வது, இதில் ஆர்வமுள்ள நண்பர்களைச் சந்திப்பது என்று இதில் மட்டும் தான் எங்களால் கவனம் செலுத்த இயலுகின்றது. எமது குழுவில் இருக்கின்ற அனைவரும் பகுதி நேரமாகத் தான் இந்தப் பணியை இறைவனது திருப்பொருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றோம். எங்களைப் பற்றிப் பிரபல்யப்படுத்திக் கொள்ளவோ, பெயருக்காகவோ, புகழ்பெற வேண்டும் என்பதற்காகவோ, அல்லது உலகியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டோ நாங்கள் இயங்கவில்லை. நம்மிடம் ஆற்றல்கள் குவிந்து கிடக்கின்றது, வெளிக்கொணரப் பாடுபட வேண்டும். நம்முடைய ஆற்றல்கள் என்னவென்பதை முதலில் இனங் காண வேண்டும்.
சமூகத்தில் பல்வேறு தளங்களில் பணியாற்றக் கூடியவர்களிடம் எமது இணையத்தளத்தின் சிடி யை வழங்கி, அவர்களைப் பார்வையிடுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். அவர்களது கருத்துக்களையும் வரவேற்கின்றோம்.
சமூகத்தில் கல்வி ஆற்றல் மற்றும் மார்க்கத்தில் தேர்ச்சி பெற்றவர்களிடம் எமது தேவைகளைக் கூறி அவர்களது உதவியையும் பெற்று வருகின்றோம். அத்தகையவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இறைவனிடமும் பிரார்த்திக்கின்றோம்.
இன்னும், முஸ்லிம்கள் மிகவும் சிறுபான்மையினராக வசிக்கும் நாடுகளில்.., குறிப்பாக தமிழ் மக்கள் தங்களது வெள்ளிக்கிழமை குத்பாப் பிரசங்கத்திற்கான உரையை ஒவ்வொரு வாரமும் தயாரித்துக் கொடுத்தால் நல்லது. ஏனெனில், வெளிநாடுகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வாழும் முஸ்லிம்கள், வெள்ளிக் கிழமை குத்பாவை யாராது ஒருவரது வீட்டில் வைத்தோ அல்லது அறையில் வைத்தோ தான் நிறைவேற்றி வருகின்றார்கள் என்பதை அறிவோம். அத்தகையவர்களிடையே ஆலிம்களும் இருப்பதில்லை. இதற்காக சமூக சிந்தனை, ஒழுக்கமாண்புகள், சமூகச் சூழல், தீமைகள், குடும்ப சீர்திருத்தம், குழந்தை வளர்ப்பு, இவை குறித்த விழிப்புணர்வுடன் கூடிய ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.
அடுத்ததாக, இன்றைக்கு அரபியில் குழந்தைகளுக்கான ஒழுக்க மாண்புகள் சார்ந்த கார்ட்டூன்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை தமிழில் மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும், அதற்கான ஸ்டுடியோ வசதிகள், சிறப்பு வசதிகள், தொழில்நுட்பம் போன்றவை தெரியாத காரணத்தினாலும் பின்வாங்க வேண்டிய சூழ்நிலை.
எனவே, இது போல இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு பல்வேறு பணிகள் நம்முன் காத்திருக்கின்றன. அவற்றினைக் கையில் எடுத்து நீங்கள் செய்தாலும் சரி, அதற்கான வழிகாட்டலை வழங்க நாங்கள் காத்திருக்கின்றோம். அல்லது எங்களிடம் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் என்ன செய்யலாம் என்பது குறித்த கலந்துரையாடலையாவது நடத்தலாம். இன்றைக்கு அது உடனடியாகப் பயன் தராவிட்டாலும், இது போன்ற கருத்துக்கள் பரவப் பரவ இறைவனது உதவியால் நாளை அது நனவாகக் கூடும் காலம் வந்து விடலாம்.
அடுத்ததாக எஃப் எம் அலைவரிசையைப் பயன்படுத்துவது. உள்ளூரில் எஃப்.எம். அலைவரிசை பாட்டுக்கும், செய்திக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. சமுதாய சீர்திருத்தம், ஒழுக்கம் சார்ந்த பல்வேறு வழிமுறைகளை சமூகத்திற்கு வழங்க வேண்டி உள்ளது.
குறிப்பாக முழு மனித சமுதாயம் பயனடைய வேண்டும் என்று விரும்புகின்ற அனைவரையும் சேர்ந்து பணியாற்றுவதற்கு அழைக்கின்றோம். உங்களால் எந்த வகையில் எங்களுக்கு உதவ முடியும், உங்களது தகுதிகள் என்ன என்ற விபரத்தை எங்களுக்கு அளித்தால் உங்களுக்கான வேலையை நாங்கள் தேர்வு செய்து தரக் காத்திருக்கின்றோம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்னுதாரணமிக்க வாழ்க்கை என்று அல்லாஹ் தனது திருமறையிலேயே கூறி விட்டான். அதனைப் பின்பற்றி நடக்க வேண்டியதும், அதற்கான சாட்சியங்களாக இருக்க வேண்டியதும் நம்முடைய கடமை. நாம் மனித சமூகத்திற்கு நேர்வழி இன்னதென்று காட்டா விட்டால், வேறு யாரால் தான் காட்ட முடியும்?.
இது இஸ்லாமியப் புத்தாண்டு மலர்ந்திருக்கின்ற முஹர்ரம் மாதம். இதையே புத்தாண்டுச் சிந்தனையாகக் கொண்டு, கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு முஸ்லிம் முஸ்லிமாக எப்படி வாழ வேண்டும் என்பதிற்கான முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுவோம்.
இறைவன் உங்களுக்கும் எங்களுக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.
இணையத்தில் முஸ்லிம்கள்
பதிந்தது நேசமுடன் இஸ்லாம் நேரம்
குறிச்சொல் இணையத்தில் முஸ்லிம்கள், இஸ்லாமிய ஊடகம்