பைபிள் கூறும் ”தாண்” என்ற ஊரும் முரண்பாடும்
5. வரலாறுகள் என்று பைபிள் கூறும் செய்திகள் மிகுந்த பலஹீனம் உடையதாகவும் உறுதியற்றதாகவும் உள்ளன. ஆனால் திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகளில் எதுவுமே உறுதியற்றவை என்று இதுவரை எவராலும் நிரூபிக்க இயலவில்லை. பைபிள் கூறும் சில சம்பவங்களில் காணப்படும் முரண்பாடுகளைக் காண்போம்.
1. யாக்கோபின் பன்னிரண்டு பிள்ளைகளில் ஒருவரது பெயர் ”தாண்” என்பதாகும். யாக்கோபுக்கு அவர் மனைவியாகிய ராஹேலின் அடிமைப் பெண்ணாகிய பில்காள் மூலம் உண்டாகிய ஏக சந்ததி (ஆதி 30:1 முதல் 6 வரை) என்று பைபிள் கூறுகின்றது. தாணுடைய பரம்பரையே தாண் குடும்பம் எனப்படுகிறது. (எண்ணாகமம் 26: 42,43) எப்பிராயீம் கோத்திரத்திற்குத் தெற்கிலும் பெலிஸ்திய தேசத்தின் வடகிழக்கிலும் அமைந்த ஒரு குறுகிய மலைப்பிரதேசமே ஆரம்பத்தில் இவர்களின் வசிப்பிடமாக இருந்தது. கானானியர் தந்த தொல்லையின் காரணமாக தாண் புத்திரர்களில் சிலர் தங்களது நாட்டைத் துறந்து கானான் தேசத்திற்கு வடக்கு எல்லையில் உள்ள ‘லேசேம்’ என்ற கிராமத்தைப் பிடித்து அதற்கு தங்களது தகப்பனாகிய தாணின் பெயரை வழங்கி அங்கே குடியமர்ந்தனர். இதுகுறித்து யோசுவா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால் அவர்கள் புறப்பட்டுப்போய் லேசேமின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்து பட்டயக்கருக்கினால் சங்கரித்து அதைச் சுதந்தரித்துக்கொண்டு அதிலே குடியிருந்து லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள். (யோசுவா 19: 47)
ஆபிரஹாமுக்குப் பின்னர் பல தலைமுறைகள் கடந்தே தாண் என்ற பெயரில் ஒரு பிரதேசம் உருவானது என்பதை மேற்கண்ட செய்தி கூறும்போது அதற்கு முரணான வகையில் ஆபிரஹாமின் காலத்திலேயே தாண் என்ற பெயரில் ஒரு பிரதேசம் இருந்ததாக பைபிளின் சில வரிகள் குறிப்பிடுகின்றன.
தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து… (ஆதியாகமம் 14:14)
பைபிளின் கூற்றுப்படி ஆபிரஹாமுக்கும் பல தலைமுறைகளுக்குப் பின்னர் உருவான தாண் என்ற ஊருக்கு ஆபிரஹாம் எவ்வாறு சென்றார்? தாண் என்ற ஊர் ஆபிரஹாம் காலத்திலேயே பெயரிடப்பட்டதா? அவ்வாறாயின் யோசுவா 19:47 வரிகள் அதற்கு முரண்பாடாக உள்ளதே?
பைளிளில் வரலாறு என்று கூறப்படும் செய்திகளின் உறுதியற்ற தன்மைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.
இன்ஷா அல்லாஹ் வளரும்.
Thanks : Islamkalvi.com