பைபிளில் வைத்து ரூ.6 லட்சம் போதை மருந்து கடத்தல்

சென்னை : பைபிளில் வைத்து ருமேனியா நாட்டிற்கு கடத்த இருந்த ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை விமான நிலைய கார்கோ கஸ்டம்ஸ் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சென்னையில் இருந்து கூரியர் பார்சல் மூலம் ருமேனியாவிற்கு போதை மருந்து கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய கார்கோ பிரிவு கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கூரியர் பார்சல் அலுவலகத்திற்கு விரைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், அங்கு குறிப்பிட்ட ஒரு பார்சலை சோதனைச் செய்தனர். அதில் இரண்டு பைபிள் புத்தகங்கள் இருந்தன. தீவிர சோதனையில், அப்புத்தகங்களின் ஒரு பகுதியை கிழித்து, உள்ளே ஆறு பிளாஸ்டிக் சாக்கெட்டுகளில் பவுடர் இருந்தது. அதை சோதனை செய்து பார்த்ததில், அது "மார்பின்' எனப்படும் போதை மருந்து என தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட போதை மருந்தின் எடை 55 கிராம். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ஆறு லட்சம் ரூபாய். இந்த கடத்தலுக்கு காரணமானவர்களை கண்டறியும் விசாரணை நடந்து வருகிறது.

Dinamalar News