பெண்ணை கடத்தி சென்று கற்பழிப்பு: உதவி பங்குத்தந்தை சிறையிலடைப்பு

திருவாரூர்: இளம்பெண்ணை கடத்திச்சென்று கற்பழித்த, திருத்துறைப்பூண்டி உதவி பங்குத்தந்தை கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் பிரான்சிஸ்; ரேடியோ மெக்கானிக். இவரது மகள் ஜெனீபர் (20). திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் உதவி பங்குத்தந்தையாக பணி செய்பவர் ஜான்விக்டர் (30).


ஜெனீபருக்கு டீச்சர் டிரைனிங் படிக்க சீட்டு வேண்டுமென பிரான்சிஸ், ஜான்விக்டரிடம் முயற்சி செய்தார். சீட்டு வாங்கித் தருவதாகக் கூறிய ஜான்விக்டர், ஜெனீபரை செப்., 26ம் தேதி அழைத்துச் சென்றவர், மீண்டும் ஊர் திரும்பவில்லை. இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீசில், ஜெனீபரை ஜான்விக்டர் கடத்திச் சென்றதாக பிரான்சிஸ் புகார் செய்தார். செப்., 29ம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.


இந்நிலையில், திருத்துறைப்பூண்டி போலீசார், ராயநல்லூரியில் இருந்த ஜான்விக்டர் மற்றும் ஜெனீபர் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஜெனீபரை, ஜான்விக்டர் கேரளாவுக்கு கடத்திச் சென்று அங்கு வீடு எடுத்து இருவரும் தங்கி இருந்தனர். அங்கு ஜெனீபரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கற்பழித்துள்ளார். தற்போது, அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என ஜான்விக்டர் கூறிவிட்டார்.


ஜெனீபர் கொடுத்த புகாரின் பேரில், ஜான்விக்டரை போலீசார் கைது செய்து, திருத்துறைப்பூண்டி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் பாஸ்கரன், வழக்கை ஏற்று உதவி பங்குத்தந்தை ஜான்விக்டரை 15 நாள் சிறையிலடைக்க உத்தரவிட்டார். ஜெனீபரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டது.