பள்ளிவாசலுக்கு முன் கொட்டடிக்க தடை ஆனால் அதிகாலையில் பாங்கு சொல்லி தொந்தரவு செய்வது ஏன்?01

கேள்வி : பள்ளிவாசலுக்கு முன் கொட்டடித்துச் சென்றால் அதை தடுக்க முற்படுகின்றீர்கள் ஆனால் அதிகாலையில் பாங்கு கூறி தொந்தரவு செய்கின்றீர்களே?

பதில் : இஸ்லாமிய வழிபாட்டுமுறைகளில் முதன்மையானது தொழுகையாகும். தொழுகை என்பது இறைவனுக்கும், இறைவாசிக்கும் இடையே நடக்கும் உரையாடல் ஆகும். இதில் எவரும் இடையூறு செய்யக்கூடாது. ஒரு முஸ்லிம் தொழுது கொண்டிருக்கும் போது குறுக்கே இன்னொரு முஸ்லிம் கடந்து சென்றால் கூட தடுக்க வேண்டும் என்று நபிமொழகள் கூறுகின்றது. இது பொதுவான நியதியும் கூட. இரண்டு பேர் தனியாக சென்று உரையாடிக் கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே அவர்கள் முன்சென்று அவர்கள் உரையாடலை கெடுக்க நினைப்பது நியாயமாகுமா?

நமக்கு கைவீசி நடக்க சுதந்திரம் உண்டு. ஆனால் நம் கை அடுத்தவன் கண்ணை குத்தாமல் இருக்க வேண்டும். ஒரு ஊரில் ஒன்று அல்லது இரண்டு பள்ளிவாசல்கள் இருக்கலாம். தெருத்தெருவாக கொட்டடித்துச் செல்லும் பக்தர்கள் பள்ளிவாசல் முன்பு மட்டும் கொட்டடித்து செல்லாமல் மற்றவர்கள் உரிமையையும் பேணலாம் அல்லவா.

1995 ஆகஸ்ட் 2-ம் தேதி வெளிவந்த தினமலரில் (சென்னை பதிப்பு) பூரி ஜகன்நாதர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் திரைப்படப் பாடல்கள் ஒலிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை அங்குள்ள நகராட்சி தான் பிறப்பித்துளளது என்னும் செய்தியை 'திரைப்படப் பாடலுக்கு பூமியில் தடை' என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தது.

பூரி ஜகந்நாதருக்கு பூஜை செய்யும் போது இடையூறு இருக்கக் கூடாது என்பதற்காக இப்படியொரு தடையை நகராட்சி வழங்கியுள்ளது. இசைக்கருவிகளுடன் வழிபாடு நடத்தும் சம்பிரதாயங்களைக் கொண்டவர்களுக்கே இன்னொருவிதமான இசை (சினிமா பாடல்) தடையாக இருக்கிறதென்றால் அமைதியான முறையில் இறைவனோடு உரையாடும் தொழுகையின் போது கொட்டடித்துச் சென்றால் இடையூறு ஏற்படாதா என்பதை கொட்டடித்துச் செல்பவர்கள் நடுநிலையோடு நின்று சிந்திக்க வேண்டும்.

முஸ்லிம்கள் பள்ளிவாசலில் சொல்லும் பாங்கு அதிகாலை தூக்கத்தைக் கெடுக்கின்றது என்னும் வாதம் நியாயமானதல்ல. அதிகாலை ஏழுப்பப்படும் பாங்கொலியானது மூன்று நிமிடங்களுக்குள் இடம் பெறும் அழைப்புக்குரல் தான். இந்த மூன்று நிமிடத்தில் தூக்கம் சற்று கலைந்தாலும் தொடர்ந்து தூங்கவிடாமல் அது தடுக்காது. அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு. இதை பொதுவாக உணர்த்தவே அதிகாலையில் சேவலும் கூவுகிறது. பாங்கொலியை குறை கூறுபவர் சேவல் கூவுவதை குறை கூறுவதி;லலை.

கிறிஸ்தவ ஆலயங்களின் மணி ஓசையும், இந்து ஆலயங்களில் ஊதும் சங்கு ஓசையும், மணி ஓசையும் பாங்கு சொல்லும் நேரத்தைவிட அதிக நேரத்தையே எடுத்துக் கொள்கிறது என்பதையும் மாற்றார்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆரம்ப காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது மக்கள் குரைஷிகள் நபிகளாரின் தொழுகையை கெடுக்கும் விதமாக அவர்களைச் சுற்றி நின்று சீட்டியடிப்பதும், கைத்தட்டுவதுமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களோ பழிவாங்கும் விதமான மறு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. என் மக்கள் அறியாமல் செய்கின்றார்கள் என்று பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் மேற்கொண்டார்கள். அவ்வழிமுறையையே முஸ்லிம்களும் மேற்கொள்ள வேண்டும்.

வேண்டிய வார்த்தைகளையும், தலைப்புகளையும் குர்ஆனில் தமிழில் தேட ஒற்றுமை.காம் வழங்கும் தமிழ் குர்ஆன் ஸேர்ச் என்ஜின் டவுன்லோட் செய்வதற்கு.