அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்,
(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 24:36)
சகோதர, சகோதரிகளே...! கர்த்தர் சொல்லும் அந்த நாள் நம்மை நெருங்கி வருகிறது... அது எப்பொழுது வருமோ என நாம் பயத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், நாம் இந்த உலகத்து அற்ப வாழ்வில் நன்மை செய்திருந்தால் பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியும், இவ்வுலகில் தீமை செய்திருந்தால் பரலோகத்தில் நமக்கு இழிவும், நாசமும் கொண்ட நரகத்தையும் தருவதாக கர்த்தரே சொல்கிறார்.
நாம் செய்த கருமத்துக்கு அந்நாளில் நாம்தானே அனுபவித்தாக வேண்டும்...? வேறு யாரும் நம்முடைய கருமங்களுக்கான பொறுப்பைச் சுமக்க முடியாது என்பதை பின்வரும் வசனம் தெளிவு படுத்துகிறது :
பாவம் செய்கின்ற ஆத்மாவே சாகும். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கிறது. துன்மார்க்கனுடைய துன்மார்க்கம் அவன் மேல்தான் இருக்கும்.
(பழைய ஏற்பாடு எசக்கியேல் 18:20)
ஆக, தப்பிச் செல்ல முடியாத அந்த மகத்தான நாளின் ராஜா கர்த்தர் மட்டுமே...!
கர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள். (பழைய ஏற்பாடு எரேமியா 10:10)
அப்படிப்பட்ட ஒரே தேவனாகிய கர்த்தரை மட்டுமே நாம் வணங்கவேண்டும். அப்படி கர்த்தரை மட்டும் வணங்காமல் இருந்தால் பரலோக ராஜியத்தில் இடமில்லை என்பதை ஏசுவே கூறுகிறார்:
பரலோகத்திரிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கின்றவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் பிரவேசிப்பதில்லை. (புதிய ஏற்பாடு - மத்தேயு 7:21)
ஏசு சொல்கின்றபடி ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்கவேண்டும். அதை விடுத்து ஏசுவையே வணங்கச் சொல்வது, ஏசு சொன்னதற்கு மாற்றமாகாதா...? ஏசுவின் பெயரைச் சொல்ரி இல்லாத காரியம் பண்ணுகிறவர்களை ஏசு மிகவும் எச்சரிக்கிறார். இதோ:
அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா...? உமது நாமத்தினாலேயே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா...? உமது நாமத்தினாலேயே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா...? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லை... அக்கிரமச் செய்கைக்காரரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:21-23)
அன்பான சகோதர, சகோதரிகளே...! ஏசு வணங்கப்படுபவர் அல்லர். ஏசுவுடன் சேர்ந்து நாமும் வணங்கவேண்டியது அந்த கர்த்தரை மட்டும்தான். கர்த்தர் என்பதைத்தான் ஆங்கில மொழியில் GOD என்றும் அரபி மொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கின்றனர். அந்த கர்த்தராகிய அல்லாஹ், ஏசுவைப் பற்றி இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறார். ஏசுவை திருக்குர்ஆன் ஈஸா என்று அழைக்கிறது.
பின்னர் (மேரி என்ற மர்யம்) அக்குழந்தையைச் சுமந்துகொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்! ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே...! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை (என்று பழித்துக் கூறினார்கள்.)
(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன்பால் மேரி சுட்டிக்காட்டினார். நாங்கள் தொட்டிரில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்? என்று கூறினார்கள். நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கிறேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். இன்னும் என்னை தூதராக ஆக்கியிருக்கின்றான்.
இன்னும் நான் எங்கிருந்தாலும் அவன் என்னை நற்பாக்கியமுடையவனாக ஆக்கி இருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (ஏழை வரி) நிறைவேற்ற எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான். என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்.) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர்பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும் என்று (குழந்தை ஏசு) கூறியது.
இ(த்தகைய)வர்தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஏசு ஆவார்.) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கின்றார்களோ அதைப்பற்றி உண்மையான சொல் (இதுவேயாகும்.) (திருக்குர்ஆன் அத்தியாயம் 19.வசனம் 27-34.)
அதுமட்டுமல்ல. ஏசு என்ற ஈஸா (அவர் மீது சாந்தி நிலவட்டுமாக) மனிதர்களால் கொல்லப்படவும் இல்லை. எதிரிகள் அவரைக் கொல்ல நினைத்தபோது கர்த்தர் அவரைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டார்.
இன்னும் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் (மேரியின்) குமாரராகிய ஈஸா (ஏசு) மஸீஹை கொன்றுவிட்டோம் என்று அவர்கள் (யூதர்கள்) கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப் பட்டனர்.) அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப் பட்டான். மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டான். இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் அத்தியாயம் 4. வசனம் 157,158)
கர்த்தர் அளவில் உயர்த்தப்பட்ட ஏசு நெருங்கிவரும் இறுதிநாளின் அத்தாட்சியாக மீண்டும் இந்த உலகில் தோன்றவிருப்பதை முஸ்ரிம்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நிச்சயமாக அவர் (ஏசு) இறுதி காலத்திற்குரிய அத்தாட்சி ஆவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம். மேலும் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேரான வழியாகும். (திருக்குர்ஆன் அத்தியாயம் 43. வசனம் 61)
இதற்குப் பின்னரும் ஏசுவையோ அல்லது அவரது தாயாரையோ அல்லது சிலுவையையோ வணங்குபவர்களுக்கும், கர்த்தர் இறக்கியருளிய இறுதி ஏற்பாடான திருக்குர்ஆனை நம்பாதவர்களுக்கும் எதிராக நீதி விசாரணை நாளில் ஏசுவே சாட்சி சொல்லவிருக்கிறார்.
இன்னும், மர்யம் (மேரி) உடைய மகன் ஈஸா (ஏசு)வே, அல்லாஹ்வை (கர்த்தரை) அன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும்போது (ஏசுவாகிய) அவர், (இறைவா!)நீ மிகவும் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற் கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய். உன் உள்ளத்திரிருப்பதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்.
நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே (கர்த்தரையே) வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப் பவனாக இருந்தேன். அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவார்.) (திருக்குர்ஆன் அத்தியாயம் 5. வசனம் 116,117)
அன்பான கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளே...! எல்லாம்வல்ல கர்த்தராகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதன் மூலம் மட்டுமே பரலோக ராஜ்ஜியத்தில் மோட்சத்தை அடைய முடியும் என்று இதன் மூலம் அறியலாம். அறியாமையில் இருந்து விடுபட்டு நேர்வழியின்பக்கம் வரும் கிறிஸ்துவர்களை நோக்கி எல்லாம்வல்ல கர்த்தர் கூறுகிறார்:
நிச்சயமாக நாங்கள் கிறிஸ்துவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, விசுவாசிகளுக்கு (முஸ்ரிம்களுக்கு) நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே) நீர் காண்பீர். ஏனென்றால், அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
அன்பார்ந்த கிறிஸ்துவ சகோதரர்களே...! ஒருவரை நாம் உண்மையிலேயே மதிக்கிறோம் என்றால் அவரை நாம் பின்பற்ற வேண்டும், அவரது போதனைகளை ஏற்கவேண்டும். ஏசுவின் பெயரால் அவர் அல்லாதவர்கள் சொல்வதையெல்லாம் பின்பற்றுவது சரியா? அல்லது எந்த ஏசுவை நீங்கள் உயிருக்குயிராக மதிக்கிறீர்களோ அந்த ஏசுவை அப்படியே பின்பற்றுவது சரியா? சற்று பொறுமையுடன் சிந்தித்துப் பாருங்கள்...!
சத்தியத்தை ஏற்றுக்கொண்ட மக்களாக நாம் வாழ்ந்திட, ஏசு அழைக்கும் மெய்வழியான இஸ்லாமிய நெறியின் பக்கம் வாருங்கள்...! பரலோக ராஜியத்தில் பரிபூரண வெற்றியைப் பெறுங்கள்...! கர்த்தர் நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக...!
நன்றி : சமூக நல்லிணக்க மையம் (CESH)